டின்டின் – சுஜாதா தேசிகன்

பத்தாவது படிக்கும்போது எனக்கு டின்டின் (Tintin) அறிமுகம் கிடைத்தது. சப்பை மூஞ்சி, Quiff தலைமயிர், கூட ஒரு நாய், அவ்வளவுதான்.

கிட்டதட்ட 100 மொழிகளில், பல புத்தகங்களில் இதே மூஞ்சிதான், கொஞ்சம்கூட மாற்றம் இருக்காது. மக்கள் மனதில் ஆழப் பதிந்துவிட்டது. நான் படித்த அதே டின்டின்னை அதே ஆர்வத்துடன் என் மகள் படிக்கிறாள். நமக்கு வயசானாலும், டின்டின்னுக்கு வயசாகாது!.

சாதாரண நாவலைப் படம் எடுத்தாலே ஆயிரத்தெட்டு விமர்சனங்களைத் தாங்கிக்கொள்ள வேண்டும். காமிக்ஸைப் படம் எடுப்பதோ மிகப் பெரிய சவாலே!. 2D-யாக பல மில்லியன் தீவிர ரசிகர்கள் பார்த்த அதே டின்டின்னை எந்தக் குறையும் இல்லாது 3D டின்டின்னாகக் காண்பிக்க துணிவும் உழைப்பும் வேண்டும்.

ஸ்பீல்பெர்க் பீட்டர் ஜாக்சனின் கூட்டணி, காமிக்ஸை அப்படியே எடுக்காமல், திரைக்குக் கொண்டுவரும்போது என்னென்ன செய்ய வேண்டும் என்று ஹோம்வர்க் செய்து படத்தின் ஒவ்வொரு காட்சியையும் செதுக்கியுள்ளார்கள். டின்டின்னை மட்டும் 3D-இல் காண்பித்தால் போதாது, சுற்றி இருப்பதையும் 3D-யாகக் காண்பிக்க வேண்டும்; பக்கத்தில் இருக்கும் மாடிப்படி, ஏன் டின்டின் கட்டியிருக்கும் ஷூ-லேஸ் முதற்கொண்டு.

அறிமுகக் காட்சியில் மார்க்கெட்டில் டின்டின்னை சாலை ஓர ஓவியர் வரைவது போலவும், 3D டின்டின் மூஞ்சியைக் காண்பிக்காமல் அந்த ஓவியர் வரைந்த 2D டின்டின்னை முதலில் காண்பித்துவிட்டு பிறகு 3D டின்டின்னை நமக்கு அறிமுகம் செய்வதிலிருந்து ஸ்பீல்பெர்க் புத்திசாலித்தனம் ஆரம்பிக்கிறது. இந்தக் காட்சி இல்லை என்றால் நிச்சயம் நாம் பார்த்த டின்டின் மாதிரி இந்த டின்டின் இல்லையே என்ற எண்ணம் நம் மனதில் எழும்.

படத்தில் டின்டின் முகத்தைக் காட்டிலும் கேப்டன் ஹாடாக் மூகம் அச்சு அசல்!. டின்டின் முக அமைப்பு, தலைமுடி, டிரஸ் எல்லாம் அப்படியே இருந்தாலும், டின்டின் மூஞ்சியில் இருக்கும் ஒரு குறுகுறுப்பு மிஸ்ஸிங்!.

3D படங்கள் அவதாருக்குப் பிறகு சர்வசாதாரணமாகிவிட்ட நிலையில் Motion Performance Capture வளர்ச்சி அசர வைக்கிறது. ஆனால் டெக்னாலஜி இருக்கிறது என்ற காரணத்துக்காக இவர்கள் ரோட்டில் போகும் குப்பனயோ சுப்பனையோ உபயோகப்படுத்தி எடுக்காமல், பெரிய பெரிய நடிகர்களைப் போட்டு படம் எடுத்ததற்குக் காரணம் டின்டின் சினிமாவில் ஒழுங்காக வர வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்.

The Adventures of Tintin

செய்திகளையும் ஸ்பீல்பெர்க் பேட்டியையும் படித்தால் அவருக்கு டின்டின்னைப் படமாக்கும் எண்ணம் இருபது வருடங்களுக்குமுன்னரே வந்தது தெரிகிறது. ‘ரெய்டர்ஸ் ஆஃப் தி லாஸ்ட் ஆர்க்’ (Raiders Of The Lost Ark) படத்தின் பத்திரிகை விமர்சனங்களில் டின்டின் சாயல் இருக்கிறது என்று பிரெஞ்ச் பத்திரிகை ஒன்றின் விமர்சனத்தைப் படித்ததில், டின்டின் பற்றியும் படிக்க ஆரம்பித்தார்; அசந்து போனார். அதைத் திரைப்படம் ஆக்கும் உரிமையை ஹெர்ஜேவை சந்தித்துப் பெற்றார். ஆனால் படம் எடுக்க ஆரம்பிக்கும்முன் ஹெர்ஜே இறந்துவிட, படம் எடுக்கும் எண்ணத்தையும் ஓரம்கட்டினார் ஸ்பீல்பெர்க். சில வருடங்களுக்குமுன் திரும்ப ஆரம்பித்து டின்டின்னை மோஷன் பர்ஃபாமன்ஸ் கேப்சர் மூலம் உயிர்ப்பித்துள்ளார்.

Advertisement
  1. No trackbacks yet.

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Connecting to %s

Follow

Get every new post delivered to your Inbox.

Join 79 other followers