28- ஜோதிடம் – சோ


எங்கே பிராமணன்? – டெலிவிஷன் விளக்கங்கள்

கேள்வி கேட்பவர் : ஜோஸ்யத்தை ஹிந்துக்கள் நம்புகிற மாதிரி வேறு யாரும் நம்புவதில்லை…
சோ : அப்படிச் சொல்ல முடியாது. ஒவ்வொரு தேசத்தில், அல்லது மதத்தில், ஒவ்வொரு வகையான ஜோதிடம் நம்பப்படுகிறது. நியூமராலஜி மட்டுமல்லாமல், பிறந்த தேதியை வைத்தும் பலன்கள் பார்க்கப்படுகின்றன. ஹிந்துக்களிடையே இந்த நம்பிக்கை கூடுதலாக இருக்கிறது என்று வேண்டுமானால் சொல்லலாம்.

கேள்வி : ‘கூடுதல்’ என்று மட்டும் சொல்லிவிட முடியாது. இங்கே அது வெறியாகவே இருக்கிறது. உதாரணத்திற்குப் பார்த்தால், ஒருவருக்கு உடல் நலம் அடிக்கடி பாதிக்கப்பட்டால் கூட, ஜோஸ்யரைத் தேடிப் போகிறார். இது என்ன பைத்தியக்காரத்தனம்! உடல் நலம் சரியில்லை என்றால், டாக்டரிடம்தானே போக வேண்டும்?
சோ : சரி. ஒரு டாக்டரிடம் அந்த நபர் போகிறார். பல டெஸ்ட்கள் செய்யப்படுகின்றன. பல மாத்திரைகள்; இஞ்ஜெக்ஷன்கள். ஆனாலும் உடல் நலம் சீர்படவில்லை. வேறு டாக்டரிடம் போகிறார். அப்போது முதல் டாக்டரிடம் போனது மூடநம்பிக்கையா, வெறியா?
இரண்டாவது டாக்டரிடமும் குணம் தெரியவில்லை என்றால், ஒரு கிளினிக்கில் அட்மிஷன் செய்து கொள்கிறார். எல்லா டெஸ்ட்களும் திரும்பச் செய்யப்படுகின்றன.
‘முதலிலே செய்தாகி விட்டது – இதோ அந்த ரிஸல்ட்கள்’ என்று கூறினால், கிளினிக்கில் அதை ஒப்புக் கொள்ளாமல், புதிய டெஸ்ட்கள் நடக்கின்றன. செலவு, மீண்டும் செலவு, மேலும் செலவு. இது என்ன ரொம்ப புத்திசாலித்தனமா?
நமக்கு விவரம் தெரியாது. டாக்டருக்குத் தெரியும் என்பது நம்பிக்கை. அதனால் அவரிடம் போவதும் நம்பிக்கை. அவர் சொல்கிற மருந்தைச் சாப்பிடுவதும் நம்பிக்கை.
இதையெல்லாம் பகுத்தறிவு என்று கூறுகிற நீங்கள், ஜோஸ்யத்தை ஏன் இகழ்கிறீர்கள்?

அதே மாதிரி ஜோஸ்யர்களிலும், ஜோதிட சாஸ்திரத்தை நன்கு அறிந்தவர்கள் இருக்கிறார்கள். அதில் நல்ல அனுபவம் உள்ளவர்கள் இருக்கிறார்கள். அவர்களைச் சிலர் நம்பினால், அதில் என்ன தவறு?
தொகுப்பு : அல்லயன்ஸ் ஸ்ரீனிவாசன்
No trackbacks yet.