105-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


photo (19)

திருச்சியில் ஒரு பக்தர்.  புகைப்படக்காரர்.  சிறிய ஸ்டுடியோ வைத்திருந்தார்.  வீட்டு பூஜையறையில் காஞ்சி மகானின் படம் பிரதானமாக இருக்கும்.

தினமும் காலையில் எழுந்து குளித்த பிறகு,  ஏதாவது ஒரு படையலை, மகாபெரியவர் படத்துக்கு முன் வைத்து வணங்கிவிட்டுத்தான் தன் வேலையை ஆரம்பிப்பார்.  பெரியவாளின் நாமத்தை அவரது உதடுகள் உச்சரித்துக்கொண்டே இருக்கும்.

ஒரு தடவை பெரியவா,  ஆந்திர மாநிலத்தில் உள்ள கர்நூலுக்கு விஜயம் செய்திருந்தார்.  அதுவோ உஷ்ணப் பிரதேசம்.  வெயில் கடுமையாகக் கொளுத்திக் கொண்டிருந்தது.

திருச்சியில் இருந்த இந்த புகைப்படக் கலைஞருக்கு ‘பெரியவாளைத் தரிசிக்க வேண்டும்’  என்று மனதில் ஆசை வந்தது.  அன்று காலை ரயிலில் புறப்படும்முன் வழக்கம்போல் பெரியவா படத்துக்கு முன்னால் படையலாக சூடான பாலை ஒரு டம்ளரில் ஊற்றி வைத்துவிட்டுப் போனார்.

கர்நூலில் அளவுக்கு அதிகமான பக்தர் கூட்டம்.  எங்கு திரும்பினாலும் மக்கள் வெள்ளம்.  நமது புகைப்பட நிபுணர் எந்தப் பக்கமும் உள்ளே செல்ல முடியவில்லை.  சற்றுத்  தூரத்தில் இருந்த மணற்குவியல்  ஒன்றின்மீது ஏறி நின்று மகா பெரியவாளைத் தரிசிக்க முயன்றார்.  வெயிலின் கொடுமையால் கால் ஒரு பக்கம் சுட்டது.  கும்பல் குறைந்தவுடன் மாலையில் வந்து பார்த்துக்கொள்ளலாம் என்று மனதில் கவலையோடு புறப்பட்டார்.  இவ்வளவு தூரம் வந்தும் மகானை உடனடியாகப் பார்க்க முடியவில்லையே என்ற ஏக்கம் அவருக்கு.

சற்றுத்  தூரம்தான் நடந்திருப்பார்.  யாரோ அவரைக் கூப்பிடுவதுபோல் தோன்றவே, திரும்பிப் பார்த்தார்.

ஒரு பக்தர் வேகமாக இவரிடம் ஓடி வந்தார்.  “நீங்க திருச்சியிலிருந்துதானே வந்திருக்கீங்க ?”

“ஆமாம்”

பெரியவா உங்களை அழைத்துக் கொண்டு வரச் சொன்னார்.”

“என்னையா ?”  — பக்தருக்கு வியப்பு.

“நீங்க ஃபோட்டோகிராபர் தானே ?”

“ஆமாம்”

“அப்படியென்றால் வாருங்கள்….”

விடாப்பிடியாக அவரை அழைத்துக் கொண்டுபோய் பெரியவா முன் நிறுத்தினார்,  அந்தச் சிஷ்யர்.  கைகளைக் கூப்பியவாறு,  கண்களில் நீர் பெருக்கெடுத்து ஓட,  புகைப்பட நிபுணர் தன்னை மறந்து அங்கே நின்றார்.

அவரை ஒரு தடவை ஏற இறங்கப் பார்த்த மகான்,  “என்னைப் பார்க்கணும்னு இவ்வளவு தூரம் கிளம்பி வந்திருக்கே…  கடைசியில் பார்க்காமலே போனால் என்னப்பா அர்த்தம் ?”  என்றார்.

“கும்பல் நிறைய இருந்தது… அதான் கொஞ்சம் குறைஞ்சவுடனே வரலாம்னு….”  என்று தடுமாற்றத்துடன் இழுத்தார் புகைப்படக்காரர்.

“சரி.  சரி.. சாப்பிட்டியோ ? “

“சாப்பிட்டேன் !”

சில வினாடிகள் தாமதத்துக்குப் பின் மகான் பேசினார்.  “என் வாயைப் பார்த்தியோ ?”

நாக்கை வெளியே நீட்டுகிறார்.  சூடுபட்டது போல் சிவந்திருக்கிறது.  பிறகு கேட்டார்.  “உதடெல்லாம் கூடப் புண்ணாகி விட்டது..  ஏன் தெரியுமா ?”

புகைப்பட நிபுணருக்குப்  புரியவில்லை.

“நீ பாலைச் சூடா வச்சிட்டு அவசரம் அவசரமாக் கிளம்பி வந்துட்டே இல்லியா…  அதான்! ”  என்றார்.

திருச்சிக்காரருக்குப் புறப்படும்போது தான் வைத்த படையல் அப்போது தான் நினைவுக்கு வந்தது.

சாஷ்டாங்கமாக மகானின் திருவடியில் விழுந்து, “மஹா பிரபு,  என்னை மன்னியுங்கள் ”  என்று கதறினார்.

எந்தளவுக்கு பக்தி இருந்திருந்தால்,  காஞ்சி மகான் அந்த பக்தரின் பாலை ருசித்திருப்பார் என்பதைச் சற்றே எண்ணிப் பாருங்கள். அது சாத்வீகமான பக்தி !  “ஆண்டவனே,  நீதான் எனக்கு எல்லாம்!”  என்று மனதார நினைக்கும் பக்தி !!

மஹா பெரியவா அருள்வாக்கு : -

Spritual discipline is as rigorous as military discipline. If we really want to fulfil the purpose of life, we must subject ourselves to that discipline. Then we need fear no one.

29-திராவிட மாயை – ஒரு பார்வை! – சுப்பு


அதன் அடிப்படை கற்பனையே!

subbu3

சும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி தி.மு.க. பிரமுகரான எஸ்.எஸ்.தென்னரசு எழுதிய செய்தி உண்மைக்குப் புறம்பானது என்று சொன்னேன். ஆனந்த விகடன் வார இதழில் அவர் எழுதிய கட்டுரையைப் பார்த்தோம். இது பற்றிய விவரங்கள் அறிவதற்காக மதுரைக்குச் சென்று, அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் வி.எஸ்.நவமணியைச் சந்தித்தேன். இவர் தேவர் சிந்தனை மையம் என்ற அமைப்பை நடத்தி வருகிறார்.

-
தேவரைப் பற்றியும், தென்னரசு எழுதிய கட்டுரை பற்றியும் வி.எஸ்.நவமணி கூறியது : 

வி.எஸ். நவமணி

“தன்னுடைய வாழ்நாள் முழுவதும் தேசியவாதியாகவே இருந்தவர் தேவர். பிரிவினைவாதிகளுக்கு எதிராகவே அவர் செயல்பட்டார். அவருடைய கடுமையான விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாமல், திராவிட இயக்கங்கள் தவித்தன என்பதுதான் உண்மை.“ஜாதி அடிப்படையில் அமைந்த திராவிடக் கட்சிகளோடு, தேவர் இணக்கமாக இருந்தார் என்று சொல்வது தவறு. சென்னை ராஜதானியில் நீதிக்கட்சி ஆட்சி செய்த காலத்தில், அவர்கள் ஜாதிச் சங்கங்களை தொடங்கினார்கள். இந்த சங்கங்கள் தேசிய உணர்வுக்கு எதிராகச் செயல்பட்டன.“
-
பொறையார் ராவ்பகதூர் ரத்தினசாமி நாடார், நாடார் மகாஜன சங்கத்தைத் தொடங்கினார். நீதிக் கட்சியின் முக்கிய பிரமுகரான டபிள்யு. பி. சௌந்திர பாண்டிய நாடார் இந்த சங்கத்தின் தலைவராக இருந்தார். மறவர்களுக்காகத் துவக்கப்பட்ட மறவர் மகாஜன சங்கத்தின் தலைவராக இராமநாதபுரம் சமஸ்தான சேதுபதி இருந்தார். இவர் ‘முக்குலத்தோர் மகாஜன சபை’யையும் தொடங்கினார். நீதிக் கட்சிக்காரரான சேத்தூர் ஜமீன்தார் வி.எஸ்.சேவுகபாண்டித் தேவர்தான் முக்குலத்தோர் சங்கத்தின் செயலாளராக இருந்தார். நீதிக்கட்சியைச் சேர்ந்த மாயாண்டி சேவை பொருளாளராக இருந்தார்.
-
செங்குந்தர்களுக்காக செங்கல்பட்டில் ஒரு சபை தொடங்கப்பட்டது. இரட்டை மலை சீனிவாசன் ‘ஆதி திராவிட சபை’யைத் துவக்கினார். எல்.சி.குருசாமி ‘அருந்ததிய மகா சபை’யை ஆரம்பித்தார். பள்ளர்களுக்காக ‘தேவேந்திர குல வேளாளர் சங்கங்கள்’ ஏற்படுத்தப்பட்டன.“தங்கள் மக்களின் உரிமைக்காகவும், சலுகைக்காகவும் ஏற்படுத்தப்பட்ட இந்த அமைப்புகள் அன்றைய ஆங்கில அரசுக்கு ஆதரவாகவும், நீதிக்கட்சியோடு இணக்கமாகவும் செயல்பட்டன. ஆனால், விடுதலைப் போரில் தன்னை இணைத்துக் கொண்ட தேவர், ஜாதிச் சங்கத்தோடு தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளவில்லை. முக்குலத்தோர் சங்கத்தில் அவர் உறுப்பினராக இருந்ததில்லை.
-
“குற்றப் பரம்பரைச் சட்டத்தை எதிர்த்து தேவர் இயக்கம் நடத்தினார். இது ஜாதிக்கான போராட்டம் அல்ல. மறவர்கள், நரிக்குறவர், பள்ளர்களில் ஒரு பிரிவினர், பறையர்களில் ஒரு பிரிவினர், வன்னியர்களில் ஒரு பிரிவினர்… என்று தமிழகத்திலிருந்த 79 ஜாதிகள் இந்தச் சட்டத்தால் பாதிக்கப்பட்டிருந்தன.“
-
இதில் இன்னொரு விஷயம். மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்களைப் பாதித்த இந்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது நீதிக்கட்சி ஆட்சியில்தான். ஈ.வெ.ரா.வைப் பொறுத்தவரை இந்த விஷயத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் பேசியதே கிடையாது.
-
“திராவிட இயக்கங்களோடு தேவரை ஒட்ட வைக்க வேண்டும் என்று தென்னரசு நினைத்திருக்கிறார்.“ஆனந்த விகடன் இதழில் எஸ்.எஸ்.தென்னரசு எழுதியுள்ள கட்டுரையின் அடிப்படை கற்பனைதான்.“
-
தன்னுடைய தலைவர் சி.என்.அண்ணாதுரையைச் சிறப்பிக்க வேண்டும் என்பதற்காகவே, அவர் ஒரு சிறுகதை போலவே எழுதியுள்ளார். அவ்வளவுதான்.“1962–ல் தேவரை அவர் திருச்சியில் சந்தித்ததாக சொல்வது தவறு. திருச்சி ரத்தினசாமித் தேவர் வீட்டில் முத்துராமலிங்கத் தேவர் இருந்தது 1962–க்கு முற்பட்ட காலத்தில்.“தேக்குமர ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்த தேவரை தென்னரசு சந்தித்தார் என்பது அழகான கற்பனை.

“தேவர் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டது 1959-ல். உடனே அவர் ஆடுதுறை சுவாமிகள் சமாதியில் அஞ்சலி செய்தார். பிறகு மதுரையில், நெல்லையில் பொதுக் கூட்டங்களில் பேசினார். பிறகு புதுடெல்லிக்குச் சென்றார். அப்போது அவருடைய உடல்நலம் பாதிக்கப்பட்டது. 1960–ல் மதுரை ஹார்லி ராம் மருத்துவமனையில் சிகிச்சை நடந்தது. பிறகு வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் இருந்தார். பிறகு மதுரை திருநகரில் வாடகை வீட்டில் குடியிருந்தார். அவருடைய இறுதி நாட்கள் வரை இந்த வீட்டில்தான் இருந்தார்.

-
“மதுரை ஆடிவீதி நிகழ்ச்சி பற்றி தேவர் கூறியதாக தென்னரசு எழுதியிருப்பதும் கற்பனையே”
– என்றார் நவமணி. விவரங்கள் அடுத்த பதிவில்….
-
தொடரும்…
(நன்றி துக்ளக்)
subbu3

104-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


பல ஆண்டுகளுக்கு முன், ஒரு தீபாவளியன்று, காஞ்சி சங்கரமடத்தில் மகாபெரியவர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கிக் கொண்டிருந்தார். பக்தர்கள், நீண்ட வரிசையில் காத்திருந்தார்கள். அந்த வரிசையில், ஒன்பது வயது மதிக்கத்தக்க சிறுமியும் நின்றாள். நீலநிற பட்டுப்பாவாடை, பச்சை நிற சட்டையுடன், நெற்றியில் திலகமிட்டு, தலை நிறைய பூச்சூடி “பால திரிபுரசுந்தரி‘ போல், அவள் தோற்றமளித்தாள். அவளது கையில் மூன்று டப்பாக்கள் இருந்தன.

வரிசையில் நின்ற பக்தர்களின் பார்வை அந்தச்சிறுமியின் மீது பதிந்திருந்தது. எல்லாரும் கண்கொட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தனர். “”இப்படிக்கூட திவ்ய அழகுடன் ஒரு பெண் இருப்பாளா!” என்பதே அவர்களின் ஆச்சரியப் பார்வைக்கு காரணம்.

திடீரென, பெரியவர் அந்தச் சிறுமியை அழைத்தார்.

-
“”உன் பெயர் என்னம்மா? எங்கிருந்து வருகிறாய்? உன் பெற்றோர் வந்திருக்கிறார்களா?” என்று பரிவுடன் கேட்டார்.

-

தீபாவளிக்கு என்னென்ன பட்சணம் சாப்பிட்டாய்?” என்று கேள்விகளை அடுக்கினார்.

அவள், “”ஒக்காரை, பஜ்ஜி, வடை… என தான் சாப்பிட்ட பலகார வகைகள் பற்றி பெரியவரிடம் சொன்னாள்.

“”சரி… நிறைய டப்பா வச்சிருக்கியே! அதில் என்ன இருக்கு?” என்று கேட்டார் பெரியவர்.

அவள் அதற்கு, “”உம்மாச்சி தாத்தாவுக்கு பிடித்தமான கோதுமை அல்வாவும், பால்கோவாவும் வச்சிருக்கேன்,” என்று சொல்லி, இரண்டு டப்பாக்களை மட்டும் பெரியவர் முன் வைத்து, அவரை வணங்கி எழுந்தாள்.

தன் மடியில், ஒரு சிறிய டப்பாவை வைத்திருந்த அந்த சிறுமியை நோக்கி,””சரி…இரண்டு டப்பா நிறைய பட்சணம் கொண்டு வந்து தந்திருக்கியே! இன்னொரு டப்பாவிலே என்ன வச்சிருக்கே! அதை ஏன் தரலை!” என்றார்.

“”இதிலா….இதிலே தீபாவளி மருந்து வச்சிருக்கேன். உம்மாச்சி தாத்தா பட்சணத்தை சாப்பிட்டதும், இதையும் கொடுத்துட்டு போகலாமுனு இருக்கேன்,” என்று மழலை மொழியில் பதிலளித்தாள் குழந்தை. பிறகு என்ன நினைத்தாளோ! அந்த டப்பாவையும் பெரியவர் முன் வைத்து விட்டு, அவரை வலம் வந்து வணங்கினாள். பிறகு அங்கிருந்து எழுந்து போய்விட்டாள்.

-
அவளுக்கு எந்த ஊர்? தாய் தந்தை யார்? என்ற விபரத்தை மட்டும் அவள் கடைசி வரை சொல்லவே இல்லை.

அந்தச் சிறுமியை பக்தர்கள் மடம் முழுவதும் தேடியலைந்தனர். உஹூம்… யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை. அன்னை பாலதிரிபுர சுந்தரியே அங்கு வந்து, பெரியவருக்கு பட்சணம் அளித்ததாகத்தான் எல்லாரும் பேசிக்கொண்டார்கள்.
பெரியவருக்கு அம்பாளின் வடிவான பாலதிரிபுர சுந்தரி என்றால் மிகவும் பக்தி. அவளே நேரில் வந்ததாகத்தான் அவரும் கருதியிருப்பார்.

உம்மாச்சி தாத்தா‘ என்றால், “அம்மாவைப் பெற்றவர்‘ என்று பொருள். ஆம்…அந்த அம்பாளே மகாபெரியவரை தன் தந்தையாக ஏற்றிருக்கிறாள் என்று தான் இதற்கு அர்த்தம் கொள்ள வேண்டும்! ஆம்…நம்மைப் பெற்றது ஒரு தந்தை. நம் எல்லோருக்கும் தந்தை, நடமாடும் தெய்வமாய் விளங்கிய காஞ்சி மகாசுவாமிகள்.

மஹா பெரியவா அருள்வாக்கு : -

சம்சாரத்திலிருந்து விடுபடுவதற்கு குறுக்கு வழி இல்லையா ? ஒன்றே ஒன்று இருக்கிற மாதிரி பகவானே சொல்லியிருக்கிறார். “என்னையே நினைத்துக் கொண்டு எவன் சரீரத்தை விடுகிறானோ அவன் என்னை அடைந்துவிடுவான் என்று சொல்லி, “நாஸ்தி அத்ர ஸம்சய:” – இதில் சந்தேகமே இல்லை என்று ‘காரண்டி‘ கொடுத்திருக்கிறார்.(கீதையில்). “அந்த காலே சமாம் ஏவஸ்மரன்” – என்னை மட்டுமே என்று பொருள். பகவானை மாத்திரமே நினைப்பது என்பது ரொம்பக் கஷ்டம்தான். ஆனாலும் முயற்சி செய்தால் பகவானை நாம் அடைந்து விடலாம்.

28-திராவிட மாயை – ஒரு பார்வை! – சுப்பு


கழகத்தின் கப்சா

subbu3

கோடானுகோடி மக்களால் தெய்வமாக வழிபடப்படும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் 1963 நவம்பர் மாதத்தில் இயற்கை எய்தினார். அந்த நேரத்தில் ஆனந்த விகடன் இதழ் எழுதிய தலையங்கத்தின் ஒரு பகுதியைக் கொடுக்கிறேன்.

பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

“தெய்வ நிந்தனை செய்பவர்களைக் கண்டவுடன் எரிபத்த நாயனாருக்கு அக்காலத்தில் ஏற்பட்ட கோபத்தையும் அவர் துடித்த துடிப்பையும் ஒருங்கே கொண்டு, நம் காலத்தில் வாழ்ந்த தேச பக்தர் பசும்பொன் உ.முத்துராமலிங்கத் தேவர். தெய்வ நிந்தனை செய்பவர்களைக் கண்டால் ஓட ஓட விரட்டுவார் அவர்.”– ஆனந்த விகடன். 10.11.1963 இதழ்.இப்படிப்பட்ட தேவரையும் கழகத்தின் கப்சா விட்டு வைக்கவில்லை. இருபத்தி ஏழு வருடங்களுக்குப் பிறகு தேவர் இங்கே இல்லை என்ற தைரியத்தில், ஆனந்த விகடன் 16.09.1990 இதழில் எழுதுகிறார் எஸ்.எஸ்.தென்னரசு. அவர் எழுதியதைப் பார்க்கலாம்.கே.ஜீவபாரதி தொகுத்த ‘பசும்பொன் தேவரும் திராவிட இயக்கங்களும்’ என்ற புத்தகத்திலிருந்து…

1962–ல் இப்போது இருப்பதைப் போல அப்போது தொலைபேசி வசதிகள் இல்லாத காலம். அன்று கழகத்தின் பொருளாளராக இருந்த கலைஞரிடமிருந்து எனக்கு ஒரு கடிதம் வந்தது. அதில்,

-
“ ‘நீங்கள் உடனடியாகத் திருச்சிக்குச் சென்று, அங்கு ரத்தினவேல் தேவர் இல்லத்தில் தங்கியிருக்கும் பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைச் சந்தித்து நடக்கவிருக்கும் தேர்தலில், சிவகங்கைப் பாராளுமன்றத் தொகுதியில் தி.மு.க. வேட்பாளரை ஆதரிக்கக் கோரி அவரிடம் வேண்டுகோள் விடுத்து வரும்படி அண்ணா பணித்திருக்கிறார்’ என்று கலைஞர் குறிப்பிட்டிருந்தார்.“மறுநாள் காலையே திருச்சி புறப்பட்டு விட்டேன்…. மாலை நான்கு மணி அளவில் தேவரைச் சந்திக்க நான் அனுமதிக்கப்பட்டேன். தேவரின் உதவியாளர் எனக்குப் பத்து நிமிடங்கள்தான் அவகாசம் கொடுத்தார். எனக்குப் பிறகு தேவரைச் சந்திக்க நிறைய பேர் காத்திருந்தார்கள்… தேவர் தேக்குமர ஊஞ்சலில் ஆடிக் கொண்டிருந்தார். கிடைத்திருக்கும் பத்து நிமிடங்களுக்குள் வந்த காரியத்தை முடித்துக் கொள்ளத் துடித்தேன். ஆனால், தேவர் அதற்கு வாய்ப்பளிக்காமல் தி.மு.க.வைப் பற்றிய விவரங்களையே துருவித் துருவிக் கேட்டுக் கொண்டிருந்தார். தி.மு.க.வைச் சேர்ந்த ஒரு முக்கிய புள்ளியிடம் தேவர் மனம் விட்டுப் பேசுவது அதுதான் முதல் முறையாக இருக்குமோ என்று நான் சந்தேகித்தேன். பின்னாளில் விசாரித்தபோது அதுதான் உண்மை என்று தெரிந்தது…“வந்தது வீணாகி விடக் கூடாது என்ற எண்ணம் எனக்கு வந்து விட்டது. ஆகவே, முன்னுரை எதுவும் போடாமல் வந்த விஷயத்தைச் சொல்லி விட்டேன். தேவர் முதலில் சிரித்தார்.“‘சாத்தியமில்லாத விஷயம். இருந்தாலும்…’ என்று இழுத்தார்.

“‘நீங்கள் ஆதரிக்க முடியாவிட்டாலும் கழக வேட்பாளரை எதிர்க்காமல் இருந்தாலே போதும்!’ என்றேன்.

“‘அதுபற்றி வேண்டுமானால் நான் யோசிக்கிறேன்’ என்றார்.

“தேவர் மறுபடியும் பேசினார். அப்போது பேசியதை என்னால் என்றைக்கும் மறுக்க முடியாது.

“‘அண்ணாதுரையைப் பற்றி எடுத்த எடுப்பில் நான் கணித்தது தவறு. அவர் மிகவும் பெருந்தன்மையானவர். சில ஆண்டுகளுக்கு முன்பு மதுரை ஆடி வீதியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில், நான் அவரைப் பற்றிக் கடுமையாக விமர்சனம் செய்து விட்டேன். அதே தினத்தில் மதுரையில் அண்ணாதுரைக்கு ஒரு பொதுக்கூட்டம் இருந்தது. அதில் என்னைத் தாக்குவார் என்று எங்கள் மக்கள் திரண்டிருந்தார்கள். ஆனால், அண்ணாதுரை முற்றிலும் எதிர்பாராத வகையில் என்னை ஒரே தூக்காகத் தூக்கிப் பாராட்டிப் பேசிவிட்டார். தேவர் இல்லாவிட்டால் தென்பாண்டி நாட்டில் காங்கிரஸே வளர்ந்திருக்காது என்று என்னை வெகுவாகப் புகழ்ந்து பேசினார். இது நான் எதிர்பார்க்காத ஒன்று. அதுமட்டுமல்ல. என்றைக்கும் நான் மறக்க முடியாத நிகழ்ச்சி’ என்றார் தேவர்.“நான் மனதுக்குள்ளேயே மகிழ்ந்தேன். எதற்காக? அறிஞர் அண்ணா கல்லிலேயும் காவியம் தீட்டிவிட்டாரே என்பதற்காக.”– என்று எழுதினார் தென்னரசு.அண்ணா காவியம் தீட்டினாரோ இல்லையோ, தென்னரசு காவியம் தீட்டி விட்டார். அதன் பெயர் கப்சா காவியம் என்பதைச் சொல்லப் போகிறோம். அடுத்த பதிவில்.

-
(நன்றி துக்ளக்)
subbu3

27-திராவிட மாயை – ஒரு பார்வை! – சுப்பு


ஒரு தந்தியால் முடங்கிய போராட்டம்

subbu3

ம்பராமாயணம் பற்றி நவீன எழுத்தாளர் ஹெப்சிபா ஜேசுதாசன் சொல்கிறார்:

“தமிழில் கம்பனில் இல்லாதது எதுவும் இல்லை. தமிழ் இலக்கியம் என்றால் அது கம்பன்தான். என்னைப் பொறுத்தவரை, சமுதாயம் ஆகட்டும், நட்பாகட்டும், போர் ஆகட்டும், கம்பராமாயணத்தின் ஒவ்வொரு வார்த்தையும் வாழ்க்கைதான். கம்பராமாயணத்தில் ஒரு சொல்கூட வீணான சொல் கிடையாது” என்பது அவருடைய மதிப்பீடு.

படைப்பாளிகளும், கலைஞர்களும், பக்திமான்களும் தொடர்ந்து கம்பராமாயணத்தை வாசிக்கிறார்கள், நேசிக்கிறார்கள், ஆராதிக்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான விஷயம்.

ஆனால், ஐம்பது வருடங்களுக்கு முன் கம்பராமாயணப் புத்தகத்தைக் கொளுத்த வேண்டும் என்று சில புத்திசாலிகள் ஆர்ப்பரித்தார்கள். சத்தமாகப் பேசிவிட்டால் அது சங்க இலக்கியமென்றும், மைக்கில் சொல்வதெல்லாம் மணிமேகலை என்றும் சிலர் அப்போது நம்பிக் கொண்டிருந்தார்கள்.

இவ்வளவு வேகமாகப் புறப்பட்ட கழகத்தின் கண்மணிகள் ஒரு உத்தரவால் முடங்கி விட்டார்கள். ‘கம்பராமாயணம் மற்றும் பெரிய புராணத்தைக் கொளுத்தும் போராட்டம் கைவிடப்படுகிறது’ என்று ஈ.வெ.ரா. அறிவித்து விட்டார். அதற்கு அவர் சொன்ன காரணத்தைக் கேட்டு நாடே நகைத்து விட்டது. ஆங்கில அரசின் உயர் பதவியில் இருந்த ஆர்.கே. சண்முகம் செட்டியார் இந்தபோராட்டத்தைக் கைவிட வேண்டுமென்று ஒரு தந்தி அனுப்பினாராம். கழகத்தவருக்கு ஈ.வெ.ரா. மேலிடம்; ஈ.வெ.ராவுக்கு ஆர்.கே. சண்முகம்செட்டியார் மேலிடம். மேலிடத்து உத்தரவை மீற முடியுமா? போராட்டம் முடக்கப்பட்டது.

சென்னையில் நடந்த கம்ப ராமாயணச் சொற்போரைப் பற்றி சென்ற பதிவில் பார்த்தோம். சென்னையில் நடந்தது கூத்து என்றால், சேலத்தில் நடந்தது கேலிக்கூத்து.
-
சேலம் செவ்வாய்ப்பேட்டை தேவாங்க பாடசாலை மண்டபத்தில், 14.03.1943 அன்று நடந்த விவாதத்தில் சி.என்.அண்ணாதுரையும், பேரா.சு.சோமசுந்தர பாரதியும் பேசுவதாக ஏற்பாடு.சோமசுந்தர பாரதியார், “இன்றைய வாதத்தில் பெரிய புராணமும் சேர்க்கப்பட்டிருப்பதாக எனக்குத் தெரிவிக்கவில்லை. ஆகையால் நான் அது பற்றிப் பேசப் போவதில்லை…” என்று தொடங்கினார்.மேலும், “கம்பராமாயணத்தைக் கொளுத்த வேண்டாம் என்று சொல்லி, கொஞ்ச நஞ்சமிருக்கும் மரியாதையையும் போக்கடித்துக் கொள்ள வேண்டுமா? நீங்கள் கம்பராமாயணத்தைக் கொளுத்துவது என்று முடிவு செய்திருந்தால், நான் சொல்லி அதை நிறுத்த முடியாது…“கம்பராமாயணக் கருத்திலே உள்ள குறைகளை மக்களுக்கு மெள்ள மெள்ள எடுத்துச் சொல்ல வேண்டும். அறிவு வளரச் செய்ய வேண்டும். எதிரியின் கருத்தை மெள்ள மெள்ள மக்களுக்குக் கூறி, மக்கள் எதிரியின் கருத்தை ஆபாசமென்று கருதி எள்ளி நகையாடும் விதமான, நிதானமான வேலையே மிக்க பயன் அளிக்கும் என்பதை நான் தெரிந்து கொண்டே, ஆரியர்களை எங்கெங்கு எதிர்க்க வேண்டுமோ அங்கெல்லாம் செய்து வந்திருக்கிறேன்” என்றார் அவர்.

அதாவது அண்ணாதுரையின் தப்பாட்டத்தில் இது இன்னொரு வகை. தன்னுடைய தரப்பு ஆளையே அழைத்து வந்து எதிரே பேச வைத்து விட்டு வெற்றி, வெற்றி என்று வீர முரசு கொட்டுவதுதான் திராவிட பாரம்பரியம் என்பது இதன் மூலம் நிரூபணமாகிறது. இப்படிப்பட்ட போலிப் பெருமைகளால் உருவாக்கப்பட்டதுதான் திராவிட மாயை.

திராவிட மாயையின் உபகதையான, அண்ணா மாயையில் சொல்லப்படும் இன்னொரு பொய்யை இப்போது பார்க்கலாம்.

தேசமும் தெய்வமும் இரண்டு கண்கள் என்று வாழ்ந்த, பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரைப் பற்றி கழகத்தவரால் ஒரு கதை சொல்லப்படுகிறது. கதையின் சாராம்சம் இதுதான்.

-
‘மேடையில் கடுமையாகப் பேசிய தேவரை, அண்ணாதுரை தன் கனிவான பேச்சால் கவர்ந்து விட்டார்’ என்பதுதான் அந்தப் பொய். இதை எப்படிச் சொல்கிறார்கள், உண்மையில் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.ஆனந்த விகடன் வார இதழில் (16.09.1990) கருணாநிதியின் நண்பரும் தி.மு.க. பிரமுகருமான எஸ்.எஸ். தென்னரசு எழுதுகிறார்.“பேரறிஞர் அண்ணா அனைத்துத் துறைகளிலும் பெரு பெற்றி அடைந்ததற்குக் காரணம் அவரது அறிவாண்மை மட்டுமல்ல. அவரிடம் நிறைந்திருந்த இனிய இயல்புகளும் பிரதானமானவை…“1962 வாக்கில் நடந்த சம்பவம் ஒன்று இன்றைக்கும் என் மனதில் அழியாத ஓவியமாக நிலைத்து நிற்கிறது” என்று எழுதுகிறார் எஸ்.எஸ். தென்னரசு.

மற்ற விவரங்களை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

-
(நன்றி துக்ளக்)
subbu3

 

 

103-மகா பெரியவா – அனுபவங்கள் ஆயிரம்


FullSizeRender (4)

காஞ்சி மடத்துடன் நெருங்கிய தொடர்புள்ள பி.ராமகிருஷ்ணனின் அனுபவம் (குமுதம் பக்தி ஸ்பெஷல்) தொடர்கிறது…

சின்னப் பெண் குழந்தை ஒருத்திக்கு அவ ஆசைப்பட்டுக் கேட்ட ஒரு பொருளைத் தந்த சம்பவம் நெகிழ்ச்சியானது.

ஒரு சமயம் பரமாச்சார்யார், காஞ்சி மடத்துல சந்திரமௌலீஸ்வர பூஜை செய்துகொண்டு இருந்தார். கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்துக்கும் மேல அந்த பூஜை நடக்கும்.  நடுவுல எதுக்காகவும் நிறுத்த மாட்டார். ஆராதனை நடத்தறப்ப பேசவும் மாட்டார். மகா பெரியவர் பூஜை பண்றதை தரிசிக்க வந்த கூட்டம் கூடம் முழுக்க நிரம்பி வழிஞ்சுது.

வழக்கப்படியான ஆராதனைகளை செய்து கொண்டு இருந்தார் மகா பெரியவர். பார்க்க வந்திருந்த பக்தர் கூட்டத்துல ஒரு பாட்டி தன்னோட பேத்தி கூட தொலைவில் ஒரு மூலையில உட்கார்ந்து இருந்தாங்க. பெரியவா பூஜை பண்றதை பார்த்துக்கிட்டு இருந்த சமயத்துல அந்தப் பாட்டி தன் பேத்தி கிட்ட ஏதோ சொல்றதும், அந்தக் குழந்தை, “ஊஹூம்!, முடியாது… இப்பவே!”ன்னு சொல்லி  அடம் பிடிக்கறதுமாக இருந்ததை எல்லாரும் பார்த்தாங்க.

குழந்தை வீட்டுக்குப் போகத்தான் அடம் பிடிக்குது. பாட்டி சமாதானப்படுத்தறாங்கன்னு எல்லாரும் நினைச்சாங்க. ஆனா, கொஞ்ச நேரத்துல அந்தக் குழந்தை, “அதோ அந்தப் பொண்ணு கட்டிண்டு இருக்கற மாதிரி எனக்கும் பச்சைப் பட்டுப் பாவாடை வேணும்..!”னு கேட்டு அழறது எல்லாருக்கும் சத்தமாகவே கேட்டுச்சு.

பாட்டி எவ்வளவு சமாதானப்படுத்திப் பார்த்தும் குழந்தை அடம் பிடிக்கறதை நிறுத்தவே இல்லை. எல்லாரும் தலையைத் திருப்பித் திருப்பிப் பார்க்கிறார்கள்.  குழந்தை சமாதானம் ஆகிற மாதிரியும் தெரியலை. எந்தக் குழந்தையோட பட்டுப் பாவாடையைப் பார்த்து அப்படிக் கேட்குதுன்னும் புரியலை.

அந்த சமயத்துல யாருமே எதிர்பார்க்காத ஒரு விஷயத்தைப் பண்ணினார் மகா பெரியவர்.

செய்துகிட்டு இருந்த பூஜையை நிறுத்தி விட்டு, அந்தப் பாட்டியை சைகையால கிட்ட கூப்பிட்டார்.

எல்லாரும் இப்போ அந்தப் பாட்டியையும் பேத்தியையுமே பார்த்தாங்க. பூஜைக்கு இடைஞ்சல் பண்றத்துக்காக கண்டிக்கப் போறார், வெளியில போகச் சொல்லப் போறார், இப்படி ஆளுக்கு ஒரு மாதிரி நினைக்கத் தொடங்கினாங்க.

பாட்டி கூச்சத்தோட நெளிஞ்சுகிட்டே பெரியவா முன்னால வந்தாங்க. அன்போட அவர்களைப் பார்த்த பெரியவர், ஆசீர்வாதம் செய்யற மாதிரி கையாலே ஜாடை காண்பிச்சார்.

அதுக்கப்புறம் மடத்து சிப்பந்தி ஒருத்தரை ஜாடையால கூப்பிட்டு, குழந்தை கேட்கிற மாதிரி ஒரு பாவாடையைக் கொண்டு வரும்படி ஜாடையாலேயே சொன்னார்.

இப்போ மாதிரி, ரெடிமேடா பட்டுப் பாவாடை எல்லாம் கிடைக்காத காலகட்டம் அது. அதுலயும் கண்டிப்பா அஹிம்சா பட்டு தான் உபயோகப்படுத்தணும்கறது பெரியவாளோட கட்டளை. இப்படிப்பட்ட சமயத்துல எங்கே இருந்து அப்படி ஒரு பட்டுப் பாவடையை வாங்கிட்டு வர்றதுன்னு குழம்பினார் மடத்து சிப்பந்தி.

ஆனா, சொல்லி வைச்ச மாதிரி, மடத்துக்குப் பக்கத்துல இருந்த கடையிலேயே அந்தக் குழந்தைக்கே அளவு எடுத்துத் தைச்சு வைச்ச மாதிரி பச்சைக் கலர்ல ஒரு பட்டுப் பாவாடை கிடைச்சுது.

வாங்கிட்டு வந்து தந்ததும், அந்தப் பாவாடையை குழந்தைக்கு கட்டிவிடும்படி ஜாடையாவே சொன்ன பெரியவர், அவளை அப்படியே மணையில் உட்கார வைச்சு கன்யா பூஜை பண்ண ஆரம்பிச்சுட்டார்.

எல்லாருக்கும் ஆச்சரியம். பாட்டிக்கு நெகிழ்ச்சி. குழந்தைக்கு பச்சைப் பட்டுப்பாவாடை கிடைச்ச சந்தோஷம். இப்படி எல்லாமும் சேர்ந்து அன்றைய பூஜை ஆனந்தமா நிறைவடைஞ்சது.

இது நடந்து ஒரு மாதத்துக்கு அப்புறம் மடத்துக்கு அழுதுகிட்டே வந்தாங்க அந்தப் பாட்டி. தன்னோட பேத்தி இறந்துட்டதா சொன்னாங்க.

மகா பெரியவர் கொஞ்சமும் சலனம் இல்லாம, அந்தப் பாட்டியைப் பார்த்தார். “அன்னிக்கு நான் சந்திரமௌலீஸ்வர பூஜை பண்ணினபோது, பச்சைப் பட்டுப் பாவாடை கட்டிண்டு இருந்த இன்னொரு குழந்தை இருக்கறதா உன் பேத்தி சொன்னாளே நினைவிருக்கா ? மற்ற யாருக்குமே அப்படி ஒரு குழந்தை இருந்ததாகவே தெரியாதபோது, அவமட்டும் எப்படிப் பார்த்தா ?” என்று கேட்டார்.

திருதிருன்னு விழிச்சாங்க பாட்டி. சுத்தி இருந்த எல்லாரும், பெரியவர் ஏதோ சொல்லப் போறார்னு ஆச்சர்யமா பார்த்தாங்க.

“நான் பூஜை செய்தப்ப, அம்பிகை பாலா வந்து என் மடியில உட்கார்ந்து தானும் சேர்ந்து சிவனுக்கு அர்ச்சனை செய்துகிட்டு இருந்தா. அவளைத்தான் உன் பேத்தி பார்த்திருக்கா. பாலாம்பிகை கட்டிக்கிட்டு இருந்த மாதிரியே தனக்கும் பாவாடை வேணும்னு கேட்டிருக்கா.

தெய்வத்தையே நேரடியா தரிசனம் பண்ணின உன் பேத்தி மகா புண்ணியம் பண்ணினவ. அவ நேரடியா மோட்சத்துக்கே போயிட்டா…! அதனால கவலையேபடாதேம்மா…!”

அமைதியாகச் சொன்னார் மகா பெரியவர். அம்பிகையே அவர் பூஜை செய்யும்போது நேரில் வருகிறாள். குழந்தையாக அவர் மடியிலேயே அமர்ந்து தானும் சிவ பூஜை செய்கிறாள் என்றால், அவர் எத்துணை பெரிய மகான்!

மஹா பெரியவா அருள்வாக்கு : -

ஜீவாத்மா, பதினாறு கலையுள்ள புருஷன் என்பார்கள். பதினைந்து கலைகள் உயிராக இருப்பது என்றும் உடம்பும் ஒரு கலை என்றும் எனவே உயிர் போன பின்னும் ஒரு கலையுள்ள அந்த உடலை, ஈச்வரார்ப்பணமாக, ப்ரேத சம்ஸ்காரம் தேவைப்படுகிறது என்றும் ஒரு கருத்து உண்டு. தஹனம் செய்வதை “அந்த்யேஷ்டி” – அதாவது “இறுதியான வேள்வி” என்று உயர்வாகச் சொல்லியிருக்கிறது. கர்ப்பம் தரிப்பதிலிருந்து உபநயனம், விவாஹம் என்று வாழ்நாள் கர்மா முழுவதையும் வேள்வியாக ஈஸ்வரனிடம் ஆஹூதி செய்துகொண்டே இருக்கும் வகையில் நாற்பது சம்ஸ்காரங்கள் வகுக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையையே யாகமாகச் செய்த ஒருவனுக்கு வாழ்க்கை முடிந்தபிறகு மற்றவர்கள் செய்யும் யாகம் தான் ப்ரேத சம்ஸ்காரம்.

 

 

 

26-திராவிட மாயை – ஒரு பார்வை! – சுப்பு


சொற்போர் அல்ல, மற்போர்!

subbu3

ம்ப ராமாயணம் தொடர்பான விவாதத்தில் சி.என். அண்ணாதுரை தெரிவித்த கருத்துக்களைச் சென்ற பதிவில் பார்த்தோம். ரா.பி.சேதுப்பிள்ளையின் பதிலுரையை இப்போது பார்க்கலாம்.“இராவணன் திராவிடன், தமிழன் என்பதை நான் மறுக்கிறேன். இராவணனுடைய குணங்களை அவர்கள் நன்றாக எடுத்துரைத்தார்கள். இராவணன் திறமைசாலி. கல்விமான். அவர் கூறிய அவ்வளவு குணங்களும் இராவணனிடம் இருந்தன. ஆனால் ஒன்று இல்லை. அவன் அழிவுக்கு அதுவே காரணம். அது அவனிடமும் இல்லை. அவனாண்ட நாட்டிலும் இல்லை. அதனை கம்பர் அழகுறக் கூறுகிறார். இரக்கமென்ற ஒரு பொருளிலா அரக்கன் என்றுரைத்தார். இராவணனிடம் எல்லாமிருந்து இரக்கம் ஒன்றுதான் இல்லை. இரக்கமற்ற நெஞ்சினனான இராவணனை தன் மரபு என்று கூறுகிறாரே இவர். தமிழர், இரக்கமற்ற நெஞ்சினரா என்று கேட்கிறேன்….“இராவணன் தமிழனன்று. அவன் பேசியது ஆரியம். சீதையைத் தேடிச் சென்ற சொற்செல்வன் அனுமன், அசோக வனத்திலே சீதையைக் கண்டு, மரக்கிளையிலமர்ந்து யோசித்தான். எம்மொழியில் பேசுவது என்று. ஆரிய மொழியிலே பேசினால் இராவணன் தெரிந்து கொள்வானே என்று கம்பர் கூறுகிறார்.“இராவணன் மாறுவேடம் எடுப்பவனாயிற்றே. அவனே குரங்கு போல வந்தானோ என்று சீதை சந்தேகித்தால் என்ன செய்வது என்று எண்ணியே, அனுமன் வடமொழியில் பேசவில்லை என்றார் கம்பர். இராவணன் பேசியது ஆரிய மொழி. நண்பர் அண்ணாதுரை அவர்கள் கூறினாரே தேவபாடை என்று. அதுதான். மேலும் புலஸ்தியன் மரபு என்றார் கவி. புலஸ்தியன் ஆரியன். ஆகவே இராவணன் ஆரியனே.

“இராவணனைக் கொன்றதால் இராமனுக்குப் பிரம்மஹத்தி வந்த தென்றும், அதைப் போக்கவே சிவலிங்க பூஜை செய்தான் என்றும் தேவாரம் செப்புகின்றது. இராவணன் பிராமணன் இல்லை என்றால், பிரம்மஹத்தி எங்கனம் வரும்? ஆகவே நான் நண்பரின் வாதத்தை மறுக்கிறேன்” என்றார் ரா.பி.சேதுப்பிள்ளை.

“பிறகு, அண்ணாதுரையின் கருத்துக்கு ஆதரவாக ஈழத்தடிகள் பேசினார்.

“அதன் பின்னர், சட்டக் கல்லூரி மாணவர்களில் ஒருவராகிய தோழர் சீனிவாசன் என்பவர், ‘ஆரியர்களுக்கும் திராவிடர்களுக்கும் முற்பட்ட காலத்திலேயே இரத்தக் கலப்பு ஏற்பட்டு விட்டது. எனவே, இப்போது ஆரியர், திராவிடர் என்று பேசுவது முறையாகா’ தென்று பேசினார். கூட்டத்தில் இருந்தவர்கள் அவர் பேசுவது ஆதாரமற்ற கூற்று என்று கூற, சிறிது கலவரமுண்டாயிற்று. உடனே தோழர் சீனிவாசன் தம்முடைய பேச்சை நிறுத்திக் கொண்டார்.“சீனிவாசனுக்குப் பிறகு சி.என்.அண்ணாதுரை மீண்டும் பேசினார். “முடிவில் பேசிய தலைவர் சி.எம்.இராமச்சந்திரஞ் செட்டியார் அவர்கள், “விவாதத்திலே இருவரும் அழகுறப் பேசினர். இனியும் பேசுவர் என்று நம்புகிறேன். எனவே, பிறகே என் கருத்தைக் கூற விரும்புகிறேன். இப்போது இது குறித்து ஒன்றும் கூறவில்லை என்று பேசினார்.”இதுவரை படித்தது, கழகத்தவரின் வெளியீடான ‘தீ பரவட்டும்’ என்ற புத்தகத்தில் உள்ள விவரம்.அண்ணாதுரையின் கருத்தை மறுத்துப் பேச முயன்ற மாணவரை பேச விடாமல் காலித்தனம் செய்திருக்கிறார்கள். நூற்றுக்கணக்கான சுயமரியாதைக்காரர்கள் அங்கே கூடியிருந்தார்கள் என்று அவர்களே எழுதுகிறார்கள். மொத்தத்தில் அன்று நடந்தது சொற்போர் அல்ல மற்போர் என்பதுதான் நம்முடைய கருத்து. கூட்டத் தலைவர் யாருக்கு வெற்றி என்பது பற்றி எதுவும் சொல்லவில்லை. ராவணன் பற்றிய ரா.பி.சேதுப்பிள்ளையின் கருத்துக்கு அண்ணாதுரை பதில் சொல்லவில்லை.

கமலஹாசன் நடித்து தியேட்டர்களில் வசூலைக் குவித்த திரைப்படம் ‘நாயகன்.’ அந்தப் படத்தின் இறுதிக் காட்சியில் ஒரு குழந்தை கதாநாயகனைப் பார்த்துக் கேட்கும். ‘நீங்கள் நல்லவரா, கெட்டவரா’ என்று. பதில் சொல்லாமலேயே படத்தை முடித்து விடுவார்கள்.

கம்பராமாயணச் சொற்போரும் – மன்னிக்கவும் – மற்போரும் இப்படித்தான் நடந்திருக்கிறது.

-
(நன்றி துக்ளக்)
subbu3
Follow

Get every new post delivered to your Inbox.

Join 460 other followers